மலட்டுத்தன்மை சிகிச்சை

மலட்டுத்தன்மை சிகிச்சை (Infertility Treatment) எனப்படுவது, ஆண்களிலோ, பெண்களிலோ அல்லது இருவரிலும் கூட்டாகவோ, குழந்தை ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியாத மலட்டுத்தன்மை காணப்படும்போது, அந்நிலையை அகற்றி, குழந்தைப் பேற்றைக் கொடுப்பதற்காக வழங்கப்படும் சிகிச்சை அல்லது மேற்கொள்ளப்படும் தொழில் நுட்பமாகும். இந்தச் சிகிச்சையானது முழுமையாகவோ, அல்லது பகுதியாகவோ செயற்கையான முறைகளைக் கொண்டிருக்கும்.

இந்தச் சிகிச்சைகள் கடினமானவையாகத் தோன்றினாலும், மலட்டுத்தன்மைக்கான காரணிகள் பற்றியும், சிகிச்சைகள் பற்றியும் தெளிவான விழிப்புணர்வுடன் சிகிச்சைக்குட்படும்போது, மன அழுத்தம் குறைவாகி சிகிச்சை வெற்றியளித்து, குழந்தையைப் பெற்றுக்கொள்ளல் இலகுவாகும்[1][2]. உண்மையில் மலட்டுத்தன்மையற்ற பெற்றோராக இருப்பினும், கடத்தப்படக்கூடிய எய்ட்சு போன்ற தொற்று நோய்கள் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் பெற்றோர்களில் காணப்படுமாயின், கருத்தரிப்பின்போது அவ்வகை நோய்கள் நோய்த்தொற்றுமூலம் குழந்தைக்கும் வருவதனைத் தவிர்ப்பதற்காகவும் இவ்வகையான சிகிச்சைகள் எடுத்துக் கொள்ளப்படுவதுண்டு.

முட்டை உருவாக்கத்தை அதிகரித்தல் (Ovulation Induction)

மாதவிடாய் சுழற்சியில் காணப்படும் இயக்குநீர்கள். சூல்முட்டை வெளியேறல் நடுப்பகுதியில் காட்டப்பட்டுள்ளது.

சூல்முட்டை உருவாக்கத்தை அதிகரிக்கச் செய்யும் மருந்துகள் பயன்படுத்தும் முறை. இது பொதுவாக ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி கொண்ட பெண்களுக்குச் சிகிச்சையளிக்க வல்லது. இங்கு கொடுக்கப்படும் பல வகையான மருந்துகளும் பெண்களின் இனப்பெருக்கத் தொகுதியைத் தூண்டி, அதன் மூலம் கருக்கட்டல் ஏற்படுவதற்கான நிகழ்தகவை அதிகரிக்கச் செய்யும். இந்த மருந்துகளில் பெரும்பாலானவை இயக்குநீர்களாகும். இயற்கையாக இருக்கும் இயக்குநீரின் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக இவை வழங்கப்படலாம். புரோஜெஸ்தரோன் (Progesterone) இயக்குநீரே பொதுவாகச் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றது.

Other Languages