தொற்றுநோய்

மருத்துவ சோதனையில், ஒரு நோயானது நோயை உருவாக்கும் பண்பு கொண்ட வைரசு, பக்டீரியா, பூஞ்சை, புரோட்டோசோவா, மற்றும் பல்கல ஒட்டுண்ணிகள் போன்ற உயிரினங்களின் காரணமாக ஏற்படுகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டால், அந்நோய் தொற்றுநோய் என அழைக்கப்படுகிறது. இந் நோய்க்காரணிகள் (pathogen) விலங்குகளிலும், தாவரங்களிலும் நோயை ஏற்படுத்தலாம். தொற்றுநோயானது ஒரு குறிப்பிட்ட இனத்துக்குள்ளேயோ அல்லது ஒரு இனத்திலிருந்து, வேறொரு இனத்துக்கோ கடத்தப்படலாம். நோய்க்கடத்தல் வெவ்வேறு வழி முறைகளில் நடக்கலாம். நேரடி தொடுகையினால் (physical contact), காற்றின் வழியாக, நீரின் ஊடாக, உணவினால், தொடுகைக்குட்படும் பொருட்களினால் அல்லது ஒரு நோய்க்காவியினால் தொற்றுநோயானது கடத்தப்படலாம். விலங்குகளில் காணப்படும் ஒரு தொற்றுநோயானது, மனிதருக்குக் கடத்தப்படும்போது, மனிதரிலும் நோயை ஏற்படுத்துமாயின் அது Zoonotic disease என் அழைக்கப்படும்.

நோய்க்காரணி ஒன்றின் தொற்றை ஏற்படுத்தும் தன்மையானது (infectivity), அந் நோய்க்காரணியானது ஒரு உயிரினத்தினுள் உட்சென்று, அங்கே தன்னை நிலை நிறுத்தி, ஓம்புயிரினுள்/விருந்துவழங்கியினுள் பல்கிப் பெருகும் திறனில் தங்கியிருக்கும். தொற்றும் தன்மையானது (infectiousness) நோயானது ஒரு உயிரினத்திலிருந்து, வேறொரு உயிரினத்திற்கு வீரியமாக கடத்தப்படும் தன்மையில் தங்கியிருக்கும் தொற்றுக்கள் அனைத்துமே தொற்றுநோயாக இருக்க வேண்டியது அவசியமில்லை. தொற்று ஏற்பட்டிருந்தாலும், அவை நோய்க்கான அறிகுறிகளைத் தராமலும், நோய்க்காரணியால் தான் உட்செல்லும் உயிரினத்தின் தொழிற்பாடுகள் எதையும் பாதிக்க முடியாத நிலையும் காணப்படின், அது தொற்றுநோய் என குறிப்பிடப்பட மாட்டாது.

பல தொற்றுநோய்களை முழுமையாக அழித்தும், வேறு பல தொற்றுநோய்களை கட்டுப்பாட்டிற்குள்ளும் கொண்டு வந்ததால், வீழ்ச்சியடைந்து வந்த தொற்றுநோய் இறப்புக்கள், கடந்த 30 ஆண்டு காலத்தில் சூழலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களின் காரணமாக, புதிய தொற்றுநோய்களாலும், தொற்றுநோய்த் தடுப்புக்கும், தொற்றுநோய்க்கு எதிரான மருந்துகளுக்கும் எதிர்ப்புச்சக்தியைப் பெற்றுக் கொண்ட நுண்ணுயிரிகளால் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

நோய்க்கடத்தல்

தொற்றுநோயைத் தடுப்பதில் மிக முக்கியமான முறைகளில் ஒன்று கைகளை கழுவுதல்

தொற்றுநோயானது ஏதாவது ஒரு மூலத்திலிருந்து (source) கடத்தப்படுகின்றது. ஒரு தொற்றுநோய்க்கான காரணம்பற்றியும், அதற்குரிய நோய்க்காரணியின் உயிரியலை அறிந்துகொள்ளவும், நோய்க்கடத்தல் பற்றிய அறிவு மிகவும் உதவுகின்றது. நோய்க்கடத்தலானது பல்வேறு முறைகளால் நிகழ்கின்றது.

சுவாசத்தொகுதியில் ஏற்படும் தொற்றுநோய்கள், மற்றும் மூளைக்காய்ச்சல் (meningitis) என்பன பொதுவாக காற்றுச் சிறுதுளிகளால் பரவுகின்றன. இக்காற்றுச் சிறுதுளிகள் தும்மும்போது, இருமும்போது, பேசும்போது, முத்தமிடும்போது ஒருவரிலிருந்து, இன்னொருவருக்கு கடத்தப்படுகிறது. இரைப்பைகுடல் தொகுதியில் ஏற்படும் தொற்றுநோய்கள் பொதுவாக அசுத்தமடைந்த (அதாவது நோய்க்கரணிகளைக் கொண்ட) உணவு, நீர் போன்றவற்றால் ஏற்படுகின்றன. பாலின தொற்றுநோய்கள், பொதுவாக பாலியல் ஈடுபாடுகளின்போது, உடல் திரவங்கள் மூலம் கடத்தப்படுகின்றன.

Culex mosquitos ( Culex quinquefasciatus shown) are biological vectors that transmit West Nile Virus.

பல தொற்றுநோய்கள் நோய்க்காவியினாலும் கடத்தப்படுகின்றது. இந்தக் கடத்தலின்போது, நோய்க்காரணியானது காவியின் உடலினுள் உட்செல்லாமல், காவியின் வெளியுடலில் ஒட்டிக்கொண்டு சென்று கடத்தப்படுமாயின் அதை பொறிமுறைக் கடத்தல் (mechanical) என்று அழைக்கலாம். உதாரணமாக ஈயானது மாட்டுச்சாணத்தில் உட்காரும்போது, அதன் உடலில் நோய்க்காரணிகள் ஒட்டிக்கொண்டு சென்று, மீண்டும் அவை உணவுப் பொருட்களின் மேல் உட்காரும்போது, உணவுப் பொருளை அசுத்தமடையச் செய்கின்றது. இதனால், அந்த உணவை உட்கொள்ளும் உயிரினத்திற்கு நோய்க்காரணி கடத்தப்பட்டு, அங்கு நோயை ஏற்படுத்துகின்றது. மாறாக உயிரியல் நோய்க்காவிகள் எனப்படுபவை இயக்க நிலையிலிருந்து, நோய்க்காரணியை தன் உடலினுள்ளே எடுத்துச் சென்று, வேறொரு உயிரினத்தினுள் செலுத்தி, அங்கே நோய்க்காரணியை கடத்துகிறது. உதாரணமாக, நுளம்பானது ஒருவரிலிருந்து தான் பெறும் குருதியில் இருக்கும் நோய்க்காரணியை, வேறொரு நபரை கடிக்கும்போது, அவரது உடலினுள் செலுத்துவதன் மூலம் கடத்துகிறது. பொதுவாக தீவிரமான குருதியிலிருந்து உருவாகும் தொற்றுநோய்களான மலேரியா, யானைக்கால் நோய் போன்றவை இப்படியான காவிகளாலேயே ஏற்படுகின்றது. வேறு உயிரினங்களும் உயிரியல் நோய்க்காவிகளாக இருக்கின்றதாயினும், பொதுவானவை நுளம்பு, ஈ, தெள்ளு, பேன் போன்ற ஆத்ரோபோடா வகையைச் சார்ந்த உயிரினங்களாகும். இப்படியான நோய்க்காவிகள் நோய்க்காரணியின் வாழ்க்கைவட்டத்தின் குறிப்பிட்ட நிலைக்கு அவசியமாக இருப்பதனால், நோய்க்காவியை அழிப்பதன்மூலம் நோய்க்கடத்தலையும், நோய்பரவலையும் தடுக்கலாம்.

Other Languages
العربية: مرض معد
བོད་ཡིག: ནད་ཡམས།
bosanski: Zarazna bolest
Ελληνικά: Μόλυνση
Esperanto: Infekta malsano
客家語/Hak-kâ-ngî: Chhòn-ngiam-phiang
Kreyòl ayisyen: Maladi kontajye
Bahasa Indonesia: Penyakit menular
日本語: 感染症
Basa Jawa: Penyakit nular
한국어: 감염병
Lëtzebuergesch: Infektiounskrankheet
lietuvių: Infekcinė liga
Nederlands: Infectieziekte
norsk nynorsk: Infeksjonssjukdom
português: Doença infecciosa
srpskohrvatski / српскохрватски: Infektivne bolesti
සිංහල: බෝවන රෝග
Simple English: Infectious disease
slovenčina: Infekčná choroba
slovenščina: Nalezljiva bolezen
తెలుగు: అంటువ్యాధి
Türkmençe: Infeksion keseller
татарча/tatarça: Инфекцион авырулар
oʻzbekcha/ўзбекча: Infeksion kasalliklar
Tiếng Việt: Bệnh truyền nhiễm
Vahcuengh: Binghlah
中文: 傳染病
Bân-lâm-gú: Thoân-jiám-pīⁿ
粵語: 傳染病